விளம்பரங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம்.
விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது கோபத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை கடுமையாக விமர்சிக்க தோன்றும்.
ஆனால் விளம்பரங்கள் என்பது ஒரு வழி பாதையாயிற்றே,அதாவது விளம்பரங்களை பார்க்கவும் கேட்கவும் தானே முடியும் அவற்றுக்கு பதில் அளிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.விளம்பரங்களை விமர்சனம் செய்வது எப்படி சாத்தியம் என்று ஏக்கத்துடன் கேட்டால் அதற்கு ஒரு வழி, இணைய வழி இருக்கிறது.
‘ஆட்யாப்பர்’ இணையதளம் தான் அந்த வழி.
விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இந்த தளம் எந்த ஒரு விளம்பரத்தின் மீதும் உங்கள் பங்கிற்கு கருத்தை சொல்லலாம் என அழைக்கிறது .கருத்து என்பது விருப்பமாக இருக்கலாம்,வெறுப்பாக இருக்கலாம்,காட்டமான விமர்சனமாகவும் இருக்கலாம்.
இதற்கு உதவும் வகையில் இந்த தளத்தில் பிரபலமான விளம்பர வீடியோக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.உங்களுக்கு தேவையான விளம்பரத்தை கிளிக் செய்து அந்த விளம்பரம் தொடர்பான கருத்தை பதிவு செய்யலாம்.
விளம்பரம் பிடித்திருந்தால் முதலில் பேஸ்புக் பாணியில் லைக் செய்து விடலாம்.இல்லை வெறுத்து விடலாம்.அதன் பிறகு விளம்பரத்தின் உள்ளடக்கம் அல்லது உருவாக்கத்தில் ஏதேனும் ஆட்சேபம் அல்லது எதிர் கருத்து இருந்தால் அதனையும் பதிவு செய்யலாம்.
நீங்கள் குறை கூற விரும்பும் முகப்பு பக்கத்தில் இல்லை என்றால் அதனை குறிப்பிட்டு தேடியும் பார்க்கலாம்.உலகம் முழுவதும் உள்ள எந்த விளம்பரம் மீதான கருத்தையும் தெரிவிக்கலாம் என்று என்றாலும் இப்போதைக்கு எல்லா விளம்பரங்களும் இருப்பதாக தோன்றவில்லை.
எனினும் விளம்பரங்களை பார்த்து ரசிக்க மட்டுமே நேரிடும் நிலையில் அவற்றின் மீதான கருத்தை சாமான்யர்கள் வெளிப்படுத்த வழி செய்யும் இந்த தளத்தை வரவேற்கவே செய்யலாம்.
இந்த தளத்தின் அறிமுக பகுதில் குறிப்பிடப்படுவதை போல விளம்பரங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.விளம்பரங்கள் எப்படி எல்லாமோ இருக்கின்றன.ஆனால் அவை பற்றிய நமது கருத்தை தெரிவிக்க தான் வழியில்லாமல் இருக்கிறது.
ஒரு சில விளம்பரங்கள் குறித்து சமூக வல்லுனர்களும் நிபுணர்களும் விமர்சன கருத்துக்களை பதிவு செய்கின்றனறே தவிர விளம்பங்களின் பிரதான நுகர்வோரான சாமான்ய மக்கள் தங்களை கருத்தை குரலாக வெளிப்படுத்த எந்த வழியும் இல்லை.
அதற்கு அழகான இணைய தீர்வாக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நுகரவோர் கருத்திற்கேற்ப அதிகம் விரும்பபட்ட,வெறுக்கப்பட்ட விளம்பரங்களையும் இங்கே பார்க்கலாம்.பிரபலமான விளம்பரங்களையும் பார்க்கலாம்.அவரை தொடர்பான விமர்சன உரையாடலையும் பார்க்கலாம்.
இந்த தளம் சொல்வது போல விளம்பரங்கள் மீது கருத்து சொல்லும் அதிகாரத்தை நுகர்வோருக்கு வழங்குவதோடு அதன் வாயிலாக தங்கள் விளம்பரங்கள் பற்றி பொது மக்களின் கருத்துக்களை நிறுவனங்களும் அறிந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.
இணையதள முகவரி;http://www.adyapper.com/
No comments:
Post a Comment